மகான் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.
வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.
சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.
மகானின் அற்புதம்
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.
சிலருக்கு தங்கள் தவப்பயனால் மகானின் அருள் கிடைக்கும். சிலருக்குக் கிடைக்காது.
சில வெளியூர் பக்தர்கள் சேஷாத்ரி சுவாமிகள் மீது அதிகப் பற்று வைத்திருந்தனர். ஒரு முறை அவரை தரிசனம் செய்ய வந்த அவர்கள், அவரை தங்கள் ஊருக்கே கூட்டிச் செல்ல முடிவெடுத்தனர். எனவே சுவாமிகள் மறுத்தும் கேளாமல், அவரை தங்கள் கையோடு கூட்டிக் கொண்டு ரயில் ஏறி விட்டனர். ரயிலும் புறப்பட்டு விட்டது. திருவண்ணாமலை எல்லையைத் தாண்டும் சமயம். ஓடும் ரயிலிலிருந்து மகான் கீழே குதித்து விட்டார். உடம்பெல்லாம் காயம். ரயிலும் நின்று விட்டது.
கார்டும் டிரைவரும் வந்தனர். மகானைக் குற்றம் சாட்டினர். அவர்கள் மகானைப் பற்றி அறியாதவர்கள் என்பதால் மகானை பலவாறாகத் திட்டினர். அதுபோன்றே மகானின் அருமை தெரியாத சிலர் இதனை தற்கொலை முயற்சி என்றும், அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்லினர். அவ்வாறே மகானைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக குண்டுக் கட்டாக ரயிலில் ஏற்றினர். டிரைவரும் ரயிலைக் கிளப்பினார். ரயில் ஓர் அங்குலம் கூடக் கிளம்பவில்லை. டிரைவர் பல முறை முயற்சி செய்தும் பலனில்லை. வண்டி நகரவே இல்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது. அதில் சில சேஷாத்ரி பகவானின் பக்தர்களும் இருந்தனர். நடந்ததை அறிந்தனர். கார்டிடமும், டிரைவரிடமும், மகானின் பெருமையை விளக்கினர். அவரை விடுவிக்கும்படி வேண்டினர். பகவானைக் கடத்திய பக்தர்களையும் கண்டித்தனர்.
டிரைவரும், கார்டும் தங்கள் செயலுக்காக வருந்தி சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மகானைக் கூட்டிக் கொண்டு சென்ற பக்தர்களும், தங்களை மன்னிக்குமாறு வேண்டி அவர் தம் தாள் பணிந்தனர். ரயிலிலிருந்து சுவாமிகள் கீழே இறக்கி விடப்பட்டார்.
உடனே அவர் ‘ஹா ஹா’வெனச் சிரித்தார். டிரைவரும் ரயிலைக் கிளப்ப முயற்சித்தார். மெதுவாக ரயிலைத் தடவிக் கொடுத்த மகான், பின்னர் ‘போ, போ’ என்றார். உடன் ரயில் எந்தத் தடங்கலுமில்லாமல் புறப்பட்டுவிட்டது.
காண்போர் வியக்கும் வண்ணம் நடந்த இந் நிகழச்சியின் மூலம் சேஷாத்ரி சுவாமிகளின் பெருமை மூலை முடுக்கெல்லாம் பரவியது.
****
ஒருமுறை வெங்கடேச முதலியார் என்னும் அடியவரின் வீட்டிற்கு சுவாமிகள் சென்றிருந்தார். அங்கு இருந்த அவரது துணைவியார் சுப்புலக்ஷ்மி அம்மாள் மகானை வலம் வந்து தொழுதார்.
‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்னார் சுவாமிகள்.
கொல்லைப் புறத்திற்குச் சென்றார். வானத்தைப் பார்த்து ’வா வா’ என்று சொன்னார்.
அவ்வளவுதான். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தத் தோட்டத்தில் வந்து இறங்கின. பலவித வண்ணங்களில், பல வித நிறங்களில் இருந்த அவை சுவாமிகளின் தோள் மீதும், தலை மீதும் அமர்ந்து குரலெழுப்பின. அவற்றைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடி விட்டது.
’போதும் விளையாட்டு’ என்று சுப்புலக்ஷ்மி அம்மாள் சுவாமிகளிடம் சொன்னதும் சுவாமிகள் ‘சூ சூ’ என்றார். சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றாகப் பறந்து சென்று விட்டன.
****
தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்தார். திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மகானின் சமாதிகளும் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக