சித்தர்களும், அஷ்டமாசித்துக்களும்.......
இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.
நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!!
சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.
பொதுவாகவே நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோவில் கருவறைகளை ஒவ்வொன்றாக சொல்லி, எது வேண்டும் பார் என்பார். அவர் சொல்லாத கோவில்களைச் சொல்லி கேட்கக் கூடாது. கேட்டால் காட்டவும் முடியாது. இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயாஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் போல் வேஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் செயல்கள் அல்ல.
இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.
அஷ்டமாசித்துக்கள்::
* அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
* மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.
* லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.
*கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.
*பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
*பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
*ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.
*வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக