புதன், 25 பிப்ரவரி, 2015

அன்னையின் அன்பு!! (கவிதை)




(பதிற்றந்தாதி)

அன்பிற் சிறந்த அமுதமென்றும் ஆனந்த
இன்பிற் பிறந்த இசையென்றும் – என்னுள்ளம்
தன்னில் கரைந்து தவழ்ந்தாடத் தாயேநீ
என்னில் மலர்ந்த இறை!

இறையாக நின்றெனைக் காத்தே இரையை
நிறைவாக ஊட்ட நெகிழ்ந்தேன்! – மறையாம்
குறளின் வழியில் வளர்த்தாய்! குளிர்ந்தேன்!
உறவினைக் கண்டே உணர்ந்து!

உணர்ந்தும் எழுதிட உள்வரும் வார்த்தை
கொணர்ந்த இனிமைகள் கோடி! – வணங்கும்
மனிததெய்வம் அன்னையென மாமனிதர் சொல்லோ
புனிதமென்றே போற்றும் புகழ்ந்து!

புகழ்ந்திட ஏதெனக்கு வார்த்தை? பொலிர்ந்து
திகழ்ந்திடும் சூரியனைப் போற்றா(து) – இகழ்ந்தால்
நிகழும் செயலெல்லாம் நின்றிடுமா? தாயை
அகத்திலே வைப்போம் அறிந்து!

அறிந்தேநாம் செய்த தவற்றையும் அன்னை
அறியாமல் செய்ததாய்க் கொள்வாள்! – அறிவிற்கோ
அன்பின் அளவு தெரியாது! ஆண்டவனும்
தன்னுள் வணங்குவான் தாழ்ந்து!

தாழ்கின்ற தன்னடக்கம் தன்னை உணர்ந்துயர்வாய்
வாழ்கின்ற வாழ்வின் வழிகாட்டி! – சூழ்நிலையால்
தன்னைச் சுமர்ந்தவளைத் தாங்க மறந்தாலும்
தன்னுள்ளே தாங்குவாள் தாய்!

தாய்பாடும் தாலாட்டுப் பிள்ளையைத் தூங்கவைக்கும்
வாய்பாடும் பாட்டில்லை! வாழ்க்கையில் – சேய்வாழத்
தான்பட்ட துன்பமெல்லாம் தான்மறைத்து பாடுவாள்
தேன்சொட்டும் செந்தமிழைச் சேர்த்து!

சேர்த்தெழுதும் சீர்களால் பாபிறக்கும்! அன்னையன்பைக்
கோர்த்தெழுதக் கொஞ்சுதமிழ் வான்பறக்கும்! – பார்க்கின்ற
ஊர்போற்றும்! அன்னையே உன்னை அறிந்தெழுதப்
பார்போற்றி வாழ்த்தும் படர்ந்து!

படர்கின்ற பூங்கொடி பற்றின்றிப் போனால்
இடர்கின்ற துன்பம் இழைக்கும்! – திடமாய்
நடக்கின்ற தாயைநாம் பற்றி நடந்தால்
இடர்வருமோ வாழ்வில் இசைந்து!

இசையின் இனிமை! இயலின் பெருமை!
தசையும் தருகின்ற தன்மை! – திசையெங்கும்
போற்றிடும் தெய்வம்போல் நின்றுதவும் தன்மையின்
ஆற்றலே அன்னையின் அன்பு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக